பள்ளிக் கல்வி அமைச்சர் பேச்சினை திரும்ப பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் மாற்று சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதை இந்திய மாணவர் சங்கம் திரும்ப பெற வலியுறுத்துகிறது.

தமிழக பள்ளிகளில் மாணவர்கள் சிலர் கட்டுபாடின்றி நடப்பதாக கடந்த சில நாட்களாக காணொலி காட்சிகள் வெளிவருகின்றன. கண்ணியம் குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என மாணவர் சங்கம் உள்ளிட்ட கல்வியாளர்கள், உளவியல் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்ற நிலையில், இது தொடர்பாக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின்னர் பாடங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் மாணவர்களிடையே கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவதும் தவறு. பள்ளிகள் – பெற்றோர்கள் – அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், டிசியிலும், நன்னடத்தை சான்றிதழிலும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

மாணவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும் வகையில் மாற்று சான்றிதழ் வழங்குவதும் அதில் அவர்களின் நடத்தை குறித்து தெரிவிக்கப்படும் என்பதும் ஏற்புடையதல்ல. பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளி, குடும்ப சூழல், சமூக நெருக்கடிகளே மாணவர்களின் நடத்தையில் பெரும் பங்கு பிரதிபலிக்கிறது. கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளி அரசின் புள்ளி விவரங்களும், கல்வி குறித்த நிபுணர்கள் கருத்துகளும் பல்வேறு நெருக்கடிகளை தெளிவுபடுத்தியுள்ளது.

ஆசிரியர் பற்றாகுறை, விளையாட்டு, உடற்கல்வி, கலை-இலக்கியம் மற்றும் பன்முக திறன் வளர்பிற்கான ஆசிரியர்கள் தேவை குறித்தும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தில் குற்றங்களை குறைக்க கல்வி வேலைவாய்ப்பு எவ்வளவு அவசியமோ, அது போலவே கல்வி நிலையத்தில் மாணவர்களின் நடத்தை மேம்பட அவர்களின் பன்முக திறன் வளர்ப்பும், மாணவர்களும் கல்வி சூழல் குறித்து ஜனநாயகபூர்வமாக முடிவெடுக்கும் உரிமையும் அவசியமாகிறது.

மேலும் மாணவர்களை திட்டமிட்டு தண்டிப்பது, மாணவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் அமையவும் வாய்புள்ளது. மேலும் கைபேசி கொண்டு வரக்கூடாது போன்ற சில கட்டுபாடுகள் விதிப்பது அவசியமானதாக இருப்பினும் மாற்று சான்றிதழ் கொடுப்பது குறித்த அமைச்சரின் பேச்சு ஏற்புடையதாக இல்லை.

எனவே தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் இது குறித்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தமிழக மாணவர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்

ஏ.டி.கண்ணன்
மாநிலத்தலைவர்

வீ.மாரியப்பன்
மாநிலச்செயலாளர்

SFI Tamilnadu
The Students Federation of India The Students Federation of India (abbreviated as SFI) , The SFI is India’s largest student organisation with more than 4.3 million alleged members. Currently, A.T.Kannan and V.Mariappan are elected as the Tamil Nādu State President and Secretary respectively. The SFI Tamil Nādu has more than 3 Lakhs Members