கடலூர் மாவட்டம் சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வகுப்பில் மனசோர்வு ஏற்பட்டதால் இரண்டு மணி நேரம் வகுப்பில் இல்லாமல் வெளியில் சென்று திரும்பி வகுப்புக்கு வந்திருக்கிறார். இயற்பியல் துறையைச் சார்ந்த ஆசிரியர் சுப்ரமணியன் அந்த மாணவனின் காரணத்தை ஏற்காமல் மாணவரை முழங்காலிட்டு மண்டியிடச் செய்து கடுமையாக தாக்கியுள்ளார்.
காலால் மிதித்து தள்ளியுள்ளார். ஆசிரியர் பணி அறப்பணி என்பதை மறந்து மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியன் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் இடைவெளி ஏற்பட்டு தற்போது தான் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்கள் படிக்கவில்லை, வகுப்புக்கு தாமதமாக வருகின்றனர், விடுமுறை எடுக்கின்றனர் போன்ற காரணங்களை கூறி மாணவர்களை தாக்குவது, மன ரீதியாக அச்சுறுத்தி வருவது தற்போது தெரிய வருகிறது. இதனால் மாணவர்கள் மனரீதியாக மன உலச்சலுக்கு ஆளாக கூடிய சூழல் ஏற்படுகிறது. கற்றல், கற்பித்தல் தொடங்க ஆசிரியர்கள், மாணவர்களிடம் நெருக்கமாக அன்பாக பழகி முதலில் வகுப்பறைச் சூழலுக்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
அதன் பிறகு பாடங்களை தொடர்ந்து கொண்டு செல்வது சாத்தியமாகும். ஏற்கனவே மாணவர்கள் இடைநிறுத்தம் என்பது கொரோனா நோய்தொற்றால் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் என ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் அதிகமாகியுள்ளது. இந்நிலையை உணர்ந்து மானவர்களை கல்வி நிலையங்களை நோக்கி வரவைக்க வேண்டுமே தவிர விரட்டி விடக்கூடாது.
மாணவர்களிடம் குறைபாடுகள் இருப்பின் அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டும், அதே நேரத்தில் பெற்றோர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லவேண்டும். அது தவிர்த்து மாணவர்களை பள்ளிக்கு வர இயலாத நிலைக்கு தள்ளக்கூடாது. மாணவர்களின் நலன் கருதி சுப்பிரமணியன் போன்று விரும்பத்தகாத செயலில் ஈடுபடுவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். சட்டத்தை மீறி மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உளவியல்ரீதியான பயிற்சிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
ஏ.டி.கண்ணன்
மாநிலத் தலைவர்
வீ.மாரியப்பன்
மாநிலச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு
Leave a Review