அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மாணவர்களிடமிருந்து பறிக்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடிதம் எண்: பெ.ப/பி/கசா.வ-2005142/22F45674/2022 நாள்:27.05.2022 என குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்று பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் கல்லூரிகளுக்கும் துணைவேந்தர் ஆணைக்கினங்க பதிவாளர் அனுப்பவதாக அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் “பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் பல்வேறு அமைப்புகளின பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை பல்கலைக்கழகம் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளவதை முற்றிலுமாக தடைசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும். இது தொடர்பாக மாணாக்கர்களுக்கு தகுந்த அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கி மாணாக்கர்கள் முழுகவனத்தையும் கல்வி பயிலுவதில் செலுத்த வகைசெய்யுமாறும், கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் எவ்விதமான அம்சமும் வளாகத்தில் இல்லை என்பதையும், பாதுகப்பான சூழலில் தான் மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர் என்பதை பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதி செய்யுமாறு. பார்வையில் கண்டுள்ள துணைவேந்தர் அவர்களின் ஆணைப்படி. தெரிவித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” என குறிப்பிடபட்டிருந்தது.
இது பெரியார் பெயருக்கு அவர் பெயரில் அமைந்த பல்கலைக்கழக நிர்வாகம் செய்யும் அவமரியாதை. மாணவர்கள் அரசியல் பரப்புரையில் ஈடுபடக்கூடாது என்றால் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மனித உரிமை, பெண்ணுரிமை, சமூகவியல் போன்ற பாடங்களை பல்கலைக் கழகம் நடத்தாமல் நிறுத்திக் கொள்ளுமா. பல்வேறு ஊழல் முறைகேடுகள் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மாணவர்கள் உரிமைகளை பறிப்பது நியாயமா.
அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19 சங்கம் சேரும் உரிமை, பேச்சு மற்றும் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை, இயக்கம் நடத்துதல், பரப்புரை செய்தல் போன்ற பல்வேறு ஜனநாயக உரிமைகள் வழங்கியுள்ளது. ஆனால் பெரியார் பல்கலைக்கழகம் இதை தடைசெய்வதாக அறிவித்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது உடனடியாக “Contempt of Constitutional rights” கீழ் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார், அண்ணா அரசியல் வழி ஆட்சி செய்வதாக கூறும் ஒரு அரசின் கீழ் பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கையை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும், முதல்வரும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏ.டி.கண்ணன்
மாநிலத்தலைவர்
வீ.மாரியப்பன்
மாநிலச்செயலாளர்
Leave a Review